ராமேசுவரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

மீன்களின் விலையை வியாபாரிகள் குறைத்ததால் ராமேசுவரத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

Update: 2023-09-01 18:47 GMT

ராமேசுவரம்,

மீன்களின் விலையை வியாபாரிகள் குறைத்ததால் ராமேசுவரத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மீன்விலை குறைவு

ராமேசுவரத்தில் மீன் பிடி தொழிலை நம்பி 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ளன. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய காரல், சூடை, சங்காயம் உள்ளிட்ட மீன்களின் விலையை வியாபாரிகள் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே மீன்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரையில் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி சேசுராஜா கூறும்போது:-

வேலை நிறுத்தம்

மீனவர்கள் பிடித்து வரும் காரல் மீன் 1 கிலோ ரூ.40-க்கு விலை போன நிலையில் தற்போது 20 ரூபாய்க்கு வியாபாரிகள் எடுக்கின்றனர்.

சூடை மீன் ரூ.40-லிருந்து ரூ.20 ஆகவும், சங்காயம் ரூ.23-லிருந்து ரூ.17 ஆக விலையை குறைத்து வியாபாரிகள் எடுத்து வருகின்றனர்.

மீன்களின் விலையை வியாபாரிகள் வெகுவாக குறைத்துள்ளதால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது. இது குறித்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்த பின்னர், இன்னும் ஓரிரு நாளில் வழக்கம்போல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

========

Tags:    

மேலும் செய்திகள்