விசைப்படகு பலகை உடைந்து கடல்நீர் புகுந்தது; 10 மீனவர்கள் தத்தளிப்பு
பாம்பன் அருகே விசைப்படகு பலகை உடைந்து கடல்நீர் புகுந்தது. இதனால் 10 மீனவர்கள் தத்தளித்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்.
ராமேசுவரம்,
நாகப்பட்டினம் மாவட்டம் கீழபட்டினச்சேரியில் இருந்து நாகூர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் நாகூர் பகுதியைச் சேர்ந்த சிவபாலன், ராஜா, சின்னத்துரை, ராஜேந்திரன், வசந்த், சுரேஷ், ஜெகன், அதரசன், போஸ், சினியோன் ஆகிய 10 மீனவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிப்பதற்காக புறப்பட்டனர். இவர்கள் வந்த மீன்பிடி படகு ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. சூறாவளி மற்றும் கடல் சீற்றத்தில் விசைப்படகு சிக்கிக்கொண்டது. விசைப்படகின் அடிப்பகுதி பலகை உடைந்து, கடல் நீர் உள்புக தொடங்கியது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினருக்கு செல்போன் மூலம் தெரிவித்து, உதவி கேட்டனர்.
இதை தொடர்ந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து கப்பலில் விரைந்து சென்றனர். படகுடன் தத்தளித்த மீனவர்களை மீட்டதுடன், சேதம் அடைந்த படகை கயிறு கட்டி பாதுகாப்பாக பாம்பன் கொண்டு வந்தனர். தூக்குப்பாலம் நேற்று திறக்கப்பட்ட பின்னர் அந்த படகை குந்துகால் பகுதியில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு சென்று பழுதுபார்ப்பதற்காக நிறுத்தினர். கடலோர காவல்படையினர் விரைந்து செயல்பட்டதால் 10 மீனவர்களும் தப்பினர்.