ஆலங்குடியில் பேனர் வைக்க தடை விதிப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஆலங்குடியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குடியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகர்ப்புறம், கிராமப்புறங்களிலும் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் முடியும் வரை பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. போலீசார் கூறும் ஆலோசனைப்படி விநாயகர் சிலை ஊர்வலத்தை பொதுமக்கள் நடத்த வேண்டும். மேலும் அதனை மீறி பேனர் தயாரிக்கும் உரிமையாளர்கள் மற்றும் பேனர்கள் வைப்பவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும். முன் ஜாமீன்கள் வழங்கப்பட மாட்டாது. பொது இடங்கள், சாலையோரங்களில் பேனர் வைத்து பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டால் அவர்களே பொறுப்பாவார்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. போலீசார் எந்தெந்த இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கொடுத்து உள்ளார்களோ அந்த இடங்களை தவிர வேறு இடங்களில் வைக்கக் கூடாது. விநாயகர் சிலைகளை நீரில் கரைக்க வழங்கப்பட்ட குறித்த நேரத்தில் அதனை முடித்து கொள்ள வேண்டும். விழாவில் பட்டாசு வெடிப்பதோ, தீப்பந்தம் ஏற்றுவதோ, சாலையோரங்களில் விநாயகர் ஊர்வலம் போகும்போது பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்து கூடாது என்று கூட்டத்தில் அனைவரிடமும் கூறி கையெழுத்து வாங்கப்பட்டது.