வங்கியில் பயங்கர தீ விபத்து; ரூ.8 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

Update: 2023-01-04 17:46 GMT


தாராபுரம் அருகே பொதுத்துறை வங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பாதுகாப்பு பெட்டகத்தால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் தப்பியது. ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொதுத்துறை வங்கியில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையத்தில் தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கி உள்ளது. இந்த வங்கியில் கொளத்துப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வங்கி செயல்பட்டது. மாலையில் வங்கியை மூடிவிட்டு அலுவலர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திடீரென வங்கியின் அபாய சங்கு ஒலித்தது. வங்கியில் அபாய ஒலி வந்ததையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். அப்போது வங்கிக்குள் இருந்து கரும் புகை வெளியேறியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வங்கி மேலாளருக்கும், தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜன்னல் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

இதற்கிடையில் வங்கி மேலாளர் பிரசாந்த் அங்கு வந்ததால் வங்கியின் பிரதான கதவு திறக்கப்பட்டது. அதன்பின்னர் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

நகை, பணம் தப்பியது

இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த முக்கிய ஆவணங்கள், கணினி, குளிர்சாதன பெட்டி, மேஜை, நாற்காலி, மின்விசிறி மற்றும் பல்வேறு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. ஆனால் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம், அடமான நகைகள் ஆகியவை 2 அடுக்கு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததால் அவை அனைத்தும் தப்பியது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் வங்கியின் தலைமை மேலாளர் மஞ்சித் மற்றும் துணை பொது மேலாளர் ஆகியோர் வங்கிக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த பின்னர் அவர்கள் கூறும்போது " மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும், வங்கியில் பணம் மற்றும் நகைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. சில ஆவணங்கள் மட்டுமே எரிந்து போனது. அதனால் வாடிக்கையாளர்கள் யாரும் பயப்பட தேவையில்லை. தீயில் கருகிய பொருட்களின் மதிப்பு ரூ. 8 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது" என்றனர்.

தீ விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் செய்திகள்