தக்கலை:
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோட்டில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று வாழை நடும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறையினர் அந்த பகுதியில் சாலையில் உள்ள பள்ளங்களில் மண் கொட்டி நிரப்பும் பணியை தொடங்கினர். இதற்கிடையே அறிவித்தபடி போராட்டம் நடத்த கட்சியினர் அங்கு கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன், சப் -இன்ஸ்பெக்டர் ராஜசேகர், நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினீயர் தனேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மைலோடு முதல் திருவிதாங்கோடு துரப்பு பகுதி வரை சாலையை சீமைக்க ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், தற்போது ஜல்லி கிடைக்காததால் காலதாமதம் ஏற்படுவதாகவும், ஒரு வாரத்தில் பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இதனை ஏற்றுக்கொள்ளாத கட்சியினர் திருவிதாங்கோடு நடுக்கடையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலையில் வாழை நடும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. நகர செயலாளர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். மாவட்டப் பொதுச்செயலாளர் சாதிக்அலி, துணைத்தலைவர் ஜாகிர் உசைன், பொருளாளர் பைசல் அகமது, தொகுதி செயலாளர் அப்துல் ரசாக், கவுன்சிலர் முகமது ராபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.