ரூ.1.16 லட்சம் மதிப்பிலான 3 டன் விதைகள் விற்க தடை
பட்டுக்கோட்டை பகுதியில் ரூ.1.16 லட்சம் மதிப்பிலான 3 டன் விதைகள் விற்க தடை விதித்து விதை ஆய்வு துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை பகுதியில் ரூ.1.16 லட்சம் மதிப்பிலான 3 டன் விதைகள் விற்க தடை விதித்து விதை ஆய்வு துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த வாரம் முதல் தஞ்சை மாவட்டத்தில், விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி தலைமையில் குறுவை சிறப்பு விதை ஆய்வு குழு அமைக்கப்பட்டு ஒரத்தநாடு, தஞ்சாவூர், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி திருவையாறு மற்றும் அம்மாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறுகிய கால நெல் விதைகள்
தொடர்ந்து, விதை ஆய்வு குழுவினர் நேற்று பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, தனியார் விதை விற்பனையாளர்கள் விதைச்சட்ட விதிகளின் படி குறுவை பருவத்தில், குறுகிய கால நெல் விதைகளை மட்டுமே விற்பனை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அரசின் விதை உரிமங்கள் பெற்று, சான்று பெற்ற மற்றும் சான்று அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்திடவும் எச்சரிக்கை வழங்கப்பட்டது. விவசாயிகள் அரசு உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று நெல் விதைகளை வாங்கி பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
3 டன் விதைகள் விற்க தடை
கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார். விதை ஆய்வு குழுவினர் பட்டுக்கோட்டை பகுதிகளில் 15 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்து, சேகரிக்கப்பட்ட 12 அலுவலக மாதிரிகள் தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலையத்திற்கு முளைப்பு திறன் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, விதை சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட நிலையங்களில் ரூ.1.16 லட்சம் மதிப்பிலான 3 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது விதை ஆய்வாளர்கள் பாலையன், நவீன்சேவியர், முனியய்யா மற்றும் சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.