மசினகுடி அருகே குடிநீர் தொட்டி கட்ட தடை: வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
மசினகுடி அருகே குடிநீர் தொட்டி கட்ட வனத்துறை தடை விதித்ததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
மசினகுடி அருகே குடிநீர் தொட்டி கட்ட வனத்துறை தடை விதித்ததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் தொட்டி கட்ட வனத்துறை தடை
மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பழுதடைந்த சிறிய அளவிலான குடிநீர் தொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.
பின்னர் புதிய நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் பணிகள் மேற்கொள்ள உரிய அனுமதி பெற வேண்டும் என்று கூறினர். உரிய அனுமதி பெறாமல் பணிகளை தொடங்கக்கூடாது என உத்தரவிட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் சாலை மறியல்
பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் ஏராளமானவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஏற்கனவே குடிநீர் தொட்டி உள்ள இடத்தில் புதிதாக தொட்டி கட்ட வனத்துறையினர் ஏன் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பினர். பின்னர் மாவட்ட கலெக்டர் மூலமாக உரிய அனுமதி பெற்று குடிநீர் தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உறுதியளித்தனர். இதை ஏற்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனிடையே வாழைத்தோட்டம் பகுதி மக்கள் நேற்று மாலை ஊட்டிக்கு சென்று கலெக்டர் அம்ரித்தை சந்தித்து புகார் மனு அளித்தனர். தொடர்ந்து புதிய குடிநீர் தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.