உழவர் சந்தைக்கு வெளியே தள்ளுவண்டி கடைகளுக்கு தடை

பெரம்பலூரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதையொட்டி உழவர் சந்தைக்கு வெளியே தள்ளுவண்டி கடைகளுக்கு தடைவிதித்து கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2023-07-12 18:36 GMT

போக்குவரத்து நெருக்கடி

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்குமாதவி சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுவதை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, உழவர் சந்தையினை ஒட்டிய வெளிப்பகுதியில் சிலர் கடைகள் வைத்துள்ளதால் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்படுவதாகவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் உழவர் சந்தையின் உள்ளேயும், வெளியேயும் கடைகள் வைத்துள்ளதாகவும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உழவர் சந்தையில் கடைகள் வைத்துள்ள சில விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் பொதுமக்கள் சார்பில் உழவர்சந்தைக்கு வந்து செல்பவர்கள் சாலையின் இரு ஓரங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்திச்செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆகவே அப்பகுதியில் பார்க்கிங் வசதி செய்துதர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கடைகளுக்கு தடை

இதனைத்தொடர்ந்து உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள கடைகளை பார்வையிட்ட கலெக்டர் உழவர் சந்தையின் அமைவிடத்தில் இருந்து 100 மீட்டருக்குள் தள்ளுவண்டி கடைகள், மினிவேன்களில் விற்பனை செய்வது மற்றும் தரைக்கடைகள் இருக்கக்கூடாது என்ற விதி உள்ளதால், அதைப்பின்பற்றி பிற கடைகளை அகற்றிடவும், உழவர் சந்தையை சுற்றி சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் உள்ள வாரச்சந்தை மற்றும் உழவர்சந்தை குப்பை, கூழங்களை உடனுக்குடன் அகற்றிடவும் நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பிறகு கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறும்போது, உழவர் சந்தையில் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு தோட்டக்கலைத்துறையின் மூலம் கிலோ ரூ.100-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு நாளைக்கு சுமார் 200 கிலோ வரையிலும் விற்பனை ஆகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய வெங்காயம் அறுவடை செய்யும் காலம் நெருங்கியுள்ளதால், சிறிய வெங்காயம் வரத்து ஒரு வார காலத்திற்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை இணை இயக்குனர் (பொ) கீதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரண்யா, உழவர்சந்தை நிர்வாக அலுவலர் செண்பகம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்