கழுத்தறுத்தான் பள்ளத்தில் சுற்றுச்சுவர் கட்டியதில் அதிகாரிகள் பாரபட்சம்

Update: 2023-06-17 15:55 GMT


உடுமலையில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் சுற்றுச்சுவர் கட்டியதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கழுத்தறுத்தான் பள்ளம்

மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை நீராதாரங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் நீர் வழித்தடங்களின் பங்கு முக்கியமானதாகும்.எஸ்.வி.புரம் செல்லும் சாலையில் ெரயில் பாதைக்கு அருகே ஆரம்பிக்கும் கழுத்தறுத்தான் பள்ளமானது நாராயணன் காலனி, ஐஸ்வர்யா நகர், பாரதியார் மற்றும் யு.எஸ்.எஸ் காலனி, உடுமலை- தாராபுரம் சாலை, உடுமலை- திருப்பூர் சாலையை கடந்து ஏரிப் பாளையம் குறிஞ்சேரி பகுதிகளில் சேகரமாகும்தண்ணீரை சுமந்தவாறுஉப்பாறு அணையை அடைகிறது.

இந்த பள்ளத்தில் முறையான பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணி மேற்கொள்ளவில்லை. இதனால் பள்ளத்தில் புதர் மண்டி மண் தேங்கி மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு தடங்கல்கள் ஏற்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து கழுத்தறுத்தான்பள்ளத்தை தூர்வாரி பக்கவாட்டு சுவர் கட்டுமாறு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு கழுத்தறுத்தான் பள்ளம் தூர் வாரப்பட்டு பக்கவாட்டு சுவர்கட்டப்பட்டது.

ஆக்கிரமிப்பு செய்து

அப்போது ஏரிப்பாளையம் அருகே அதிகாரிகள் தனியாருக்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்து கொண்டதுடன் உடுமலை பெதப்பம்பட்டி பிரதான சாலையை ஆக்கிரமிப்பு செய்து பக்கவாட்டு சுவரை கட்டி விட்டனர். இதனால் ஏரிப்பாளையம் அருகே பெதப்பம்பட்டி சாலையின் நுழைவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தனியாருக்கு ஆதரவாக கட்டிய பகுதியை சீரமைத்து புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செடிகள், நாணல்

ஆனால் அதன் பேரில் அதிகாரிகள் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கழுத்தறுத்தான் பள்ளம் தூர்வாராததால் அதில் செடிகள், நாணல் முளைத்து காணப்படுகிறது. இதனால் மழையின் போது ஏற்படும் நீர்வரத்து தடுக்கப்பட்டு குடியிருப்புகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே கழுத்தறுத்தான் பள்ளத்தை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு முழுமையாக தூர் வாருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஏரிப்பாளையம் அருகே தனியாருக்கு ஆதரவாக வளைத்து கட்டப்பட்ட பக்கவாட்டு சுவரை சீரமைப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்