பாலருவி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

நெல்லையில் சுத்தம் செய்ய கொண்டு சென்றபோது பாலருவி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதையொட்டி திருச்செந்தூர் ரெயில் ரத்து செய்யப்பட்டது.

Update: 2022-09-11 20:24 GMT

நெல்லை, செப்.12-

நெல்லையில் சுத்தம் செய்ய கொண்டு சென்றபோது பாலருவி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதையொட்டி திருச்செந்தூர் ரெயில் ரத்து செய்யப்பட்டது.

பாலருவி எக்ஸ்பிரஸ்

கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலய் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட ரெயில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

பயணிகளை இறக்கி விட்ட பிறகு ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்காக, ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் 'பிட் லைன்' எனப்படும் பராமரிப்பு பகுதிக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.

தடம் புரண்டது

இதற்காக ரெயில் பெட்டிகள் தச்சநல்லூர் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு, 'பிட் லைன்' நோக்கி மெதுவாக பின்னுக்கு தள்ளப்பட்டது. அப்போது 'பிட் லைன்' அருகே வந்து கொண்டிருந்த பொது தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு எஸ்-3 பெட்டியின் சக்கரங்கள் திடீரென்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.

இதையடுத்து என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ரெயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் விசாரணை

ஜாக்கி உதவியுடன் தடம் புரண்ட ரெயில் பெட்டியின் சக்கரங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் தண்டவாளத்தின் மீது நிறுத்தப்பட்டது. மேலும் தண்டவாளமும் சீரமைக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த மீட்பு பணி நடந்தது.

ரெயில் தடம் புரண்டது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் ரெயில் ரத்து

ரெயில் தடம் புரண்டதால் திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில்கள் புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது. அதாவது காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் ரெயில், 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்செந்தூர் பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிட்லைனில் இருந்து வெளியே கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்வதற்காக காத்திருந்த பயணிகள் சிரமப்பட்டனர். 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு நாகர்கோவில் ரெயில் புறப்பட்டு சென்றது. திருச்செந்தூர் ரெயில் ரத்து செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்