சக்தி விநாயகர் கோவிலில் பாலாலய பூஜை

கூடலூரில் கும்பாபிஷேக விழாவையொட்டி சக்தி விநாயகர் கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது.

Update: 2022-11-25 18:45 GMT

கூடலூர்

கூடலூரில் கும்பாபிஷேக விழாவையொட்டி சக்தி விநாயகர் கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது.

பாலாலய பூஜை

கூடலூர் நகரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி பூர்வாங்க பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமான், அய்யப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கூனம்பட்டி தருமபுரி ஆதினம் ராஜ சரவண மாணிக்க சுவாமிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் செய்யப்பட்டு பாலாலய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

தொடர்ந்து கும்ப கலசங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டு கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மூலவர் உள்பட பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து விக்ரகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் கோவில் கமிட்டியினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இது குறித்து கூனம்பட்டி தருமபுரி ஆதினம் ராஜ சரவண மாணிக்க சுவாமிகள் கூறும்போது, பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு(2023) பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து திருத்தேர் திருவிழாவும் நடைபெறும். இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்