கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2022-06-13 17:24 GMT

கோவை, ஜூன்.14-

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்துள்ளார்.

பொறுப்பேற்பு

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரிந்த பிரதீப்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பணிபுரிந்த பாலகிருஷ்ணன் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து பாலகிருஷ்ணன் நேற்று மாலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் ஜெயசந்திரன், சிலம்பரசன், மதிவாணன், சுஹாசினி, உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியாது:-

பாலியல் குற்றங்கள்

கோவை மாநகரம் அமைதியாக உள்ளது. எனவே மாநகரில் தொடர்ந்து அமைதி நிலவ சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும். முதல்-அமைச்சர் கூறியது போல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதைபொருட்கள் விற்பனை செய்பவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் இரும்புகரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.

கோவை மாநகரில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும், போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுவார்கள். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மத, ஜாதி மோதல்களை தூண்டுபவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு கோவையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ளார். மேலும் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்