ராமேசுவரத்தில் முருகப்பெருமானுக்கு பகல் முழுவதும் பாலாபிஷேகம்
வைகாசி விசாகத்தையொட்டி ராமேசுவரம் மேலவாசல் முருகப்பெருமானுக்கு பகல் முழுவதும் நடந்த பாலபிஷே கத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராமேசுவரம்,
வைகாசி விசாகத்தையொட்டி ராமேசுவரம் மேலவாசல் முருகப்பெருமானுக்கு பகல் முழுவதும் நடந்த பாலபிஷே கத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வைகாசி விசாகம்
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மேற்கு வாசல் முருகன் சன்னதியில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் கொண்டுவந்த பாலால் முருகப்பெருமானுக்கு தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் இரவு முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை பூஜைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வைகாசி விசாகத்தையொட்டி முருகப்பெருமானை தரிசனம் செய்ய ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மேற்கு வாசல் முருகன் சன்னதி முன்பு நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்து சென்றனர்.
சிறப்பு அபிஷேகம்
இதேபோல் ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சாமிநாத சாமி ஆலயம், மாவட்டத்தின் அனைத்து ஊர்களில் உள்ள முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தை யொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.