பாகன் தம்பதிக்கு பஹ்ரைன் நாட்டு ரஜினி ரசிகர் மன்றம் பாராட்டு
ஆஸ்கார் ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிக்கு பஹ்ரைன் நாட்டு ரஜினி ரசிகர் மன்றம் பாராட்டு தெரிவித்தது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 2 குட்டி யானைகளை பராமரித்தது தொடர்பாக எலிபன்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்த படம் ஆஸ்கார் விருது வென்று உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த ஆவணப்படத்தில் நடந்த பாகன் தம்பதி பெள்ளி-பொம்மனை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பாராட்டினார். இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தலின் பேரில், பஹ்ரைன் நாட்டின் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் முதுமலை பாகன் தம்பதியை சந்தித்து பாராட்டினார். தொடர்ந்து அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் சார்பாக கேடயம் வழங்கி பாராட்டப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.