பாக்ஜலசந்தி பகுதியை பாதுகாக்கப்பட்ட மீன்வள மண்டலமாக அறிவிக்க வேண்டும்

பாக்ஜலசந்தி பகுதியை பாதுகாக்கப்பட்ட மீன்வள மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மீனவர்கள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-08-13 21:08 GMT

சேதுபாவாசத்திரம்:

பாக்ஜலசந்தி பகுதியை பாதுகாக்கப்பட்ட மீன்வள மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மீனவர்கள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைகேட்பு கூட்டம்

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மனோராவில், பட்டுக்கோட்டை - பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீனவ கிராம நிர்வாகிகள் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு, கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ஜெயபால் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் நா.அசோக்குமார், துரை. சந்திரசேகரன், தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் ஏ.தாஜுதீன் ஆகியோர் பேசினர்.

கோரிக்கை மனு

வருகிற 18-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் மீனவர் மாநாட்டில் திரளாக குடும்பத்துடன் கலந்து கொள்வது, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களின் தலைவர்கள், பஞ்சாயத்துகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முதல்-அமைச்சரிடம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ.க்களிடம் வழங்கினர்.

இதில் ஏ.ஐ.டி.யு.சி. தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் காளிதாஸ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நலவாரியம்

மாநில மீனவர் நல வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் விசைப்படகு மீனவர்கள், நாட்டுப் படகை சேர்ந்த மீனவர் ஒருவர் கூட நல வாரியத்தில் இடம்பெறவில்லை. நாட்டுப்படகு மீனவர்களை நல வாரியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். மன்னார் வளைகுடா பகுதியில், கடல் ஆழம் குறைந்த பகுதி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடைப்பட்ட பகுதியாகும். இங்கு அதிகப்படியான மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற பகுதியாகும்.

கடல் சமவெளி பகுதியாக இருப்பதால் பல கிலோமீட்டர் இரட்டை மடி, சுருக்குமடி, ரேஸ் மடி போன்ற வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை, இயற்கை சூழலை அழித்து வருகின்றனர். இதனால் மீன் குஞ்சுகள் பிடிபட்டு மீன் இனமே அழிந்து வருகிறது.

மீன்வள மண்டலமாக அறிவிக்க வேண்டும்

எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை, மீன் வளத்தை பாதுகாக்க, பாக்ஜலசந்தி பகுதியை பாதுகாக்கப்பட்ட மீன்வள மண்டலமாக அறிவித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உஷா புண்ணியமூர்த்தி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர் சங்க நிர்வாகிகள், கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. மீனவர் அணி தலைவர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்