காட்டு யானை தாக்கி பாகன் படுகாயம்
முதுமலையில் காட்டு யானை தாக்கி பாகன் படுகாயம் அடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
முதுமலையில் காட்டு யானை தாக்கி பாகன் படுகாயம் அடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானை
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதேபோல் வனத்துறை மூலம் 28 வளர்ப்பு யானைகள் தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை வனத்துறையினர் ரோந்து பணி, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தினமும் காலையில் வனப்பகுதிக்குள் அழைத்து சென்று மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று அபயாரண்யம் முகாமில் இருந்து வசிம், இந்தர், சுஜெய் ஆகிய வளர்ப்பு யானைகளை மாறன் தலைமையிலான பாகன்கள் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று ஓடி வந்தது. தொடர்ந்து அந்த யானை, வளர்ப்பு யானைகளை தாக்க முயற்சி செய்தது. இதை கண்ட பாகன்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பாகன் படுகாயம்
அப்போது ஆத்திரமடைந்த காட்டு யானை, பாகன் மாறன் (வயது 35) என்பவரை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மற்ற பாகன்கள் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து மாறனை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் மனோகரன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாறனை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, காட்டு யானை ஒன்று மதம் பிடித்து வனப்பகுதிக்குள் சுற்றி வருகிறது. வளர்ப்பு யானைகளை நோக்கி காட்டு யானை ஓடி வருவதை பாகன்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, திடீரென பாகன் மாறனை தாக்கி விட்டது என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.