வண்ணான் குளத்தில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம்

நாகை வண்ணான் குளத்தில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-31 18:45 GMT


நாகை வண்ணான் குளத்தில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்ணான் குளம்

நாகை காடம்பாடி நம்பியார் நகர் செல்லும் மெயின் ரோட்டில் வண்ணான் குளம் உள்ளது. இந்த குளத்தை நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்துள்ளது. இதனால் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

துர்நாற்றம்

குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கணேசன் கூறியதாவது:-

இந்த குளம் 100-க்கும் மேற்கண்ட ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீர் செழுமையாக இருக்கும்.

குப்பைகள் கொட்டப்படுகிறது

மேலும் குளத்தில் ஊர்ணி இருப்பதால் தண்ணீர் வற்றாது. இதனால்100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர். ஆடு, மாடுகளுக்கு கூட குளிப்பாட்டுவதற்கு விட மாட்டோம். இவ்வளவு சுத்தமாக குளத்தை பயன்படுத்தி வந்தோம்.கடந்த சில நாட்களாக இந்த குளம் மாசடைந்து உள்ளது. வணிக வளாகத்தில் உள்ள குப்பைகளை குளத்தில் கொட்டுவதாலும், வீடுகளில் உள்ள கழிவு நீரை குளத்தில் விடுவதாலும் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தோம். நகராட்சியினர் வந்து குளத்தில் பிளீச்சிங் பவுடரை தெளித்துவிட்டு சென்றனர். இருந்த போதிலும் துர்நாற்றம் வீசி கொண்டிருப்பதால் வீட்டில் உணவு கூட சாப்பிட முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தூர்வார வேண்டும்

அதே பகுதியை சேர்ந்த தர்மசீலன் கூறுகையில், காடம்பாடி வண்ணான் குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் அடைக்கப்பட்டுள்ளதால் போதிய அளவு தண்ணீர் வருவது கிடையாது. இந்த ஆண்டு மழையும் சரியாகப் பெய்யாததால், குளத்தின் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தும் இந்த குளம் மாசடைந்து கிடப்பது வேதனை அளிக்கிறது. கரை ஓரங்களில் ஆங்காங்கே பாசி படிந்துள்ளதால், குளத்தின் நிறம் மாறி உள்ளது. எனவே குளத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்