பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-23 19:05 GMT

கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாப்செட்கோ) கடன் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

பொது கால கடன் திட்டம் அல்லது தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.

மகளிர் சுய உதவிக்குழு

நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலரால் தரம் (கிரேடிங்) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள், அனுமதிக்கப்படுவார்கள்.

கூட்டுறவு சங்கங்கள்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்று கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்