அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பேட்டி
கன்னியாகுமரிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வந்தார். பின்னர் அவர் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போதை விழிப்புணர்வு குறித்து தமிழகத்தில் கடந்த 10 வருட காலமாக கண்டு கொள்ளாத நிலையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு போதை தடுப்பு விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்லும் பணியை தீவிரமாக தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடம் அருகே அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி துறை ரீதியாக தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் முதற்கட்டமாக மதுக்கடையை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுக்கடைகள் அகற்றம்
வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளும் கண்டிப்பாக அகற்றப்படும். இதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தேர்தல் அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் (பெரிய அளவிலான செல்போன்) கொடுப்பதாக கூறியிருந்த நிலையில், மாணவர்கள் கவனக்குறைவாக பயன்படுத்தினால் டேப் சேதாரம் ஆகும் என்பதை கருதி மீண்டும் மடிக்கணினி கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆட்சியில் 2 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு கொடுக்காமல் விட்டு சென்றுள்ளனர். அதனையும் சேர்த்து கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். இந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை புதிதாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளை நவீன முறையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு
முன்னதாக கன்னியாகுமரி வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதில் மாவட்ட பொருளாளர் கேட்சன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர்கள் பாபு (தெற்கு), மதியழகன் (வடக்கு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.