குழந்தை இயேசு ஆலய தேர் பவனி
கூடலூரில் குழந்தை இயேசு ஆலய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பவனியாக சென்றனர்.
கூடலூர்,
கூடலூரில் குழந்தை இயேசு ஆலய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பவனியாக சென்றனர்.
ஆலய திருவிழா
கூடலூரில் குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூய மரியன்னை ஆலய வட்டார முதன்மை குரு வின்சென்ட் சிறப்பு பிரார்த்தனை செய்து கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி உள்பட பல்வேறு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
2-வது நாள் (9-ந் தேதி) மாலை 5 மணிக்கு திருப்பலி, மறையுறை நிகழ்ச்சிகளும், 10, 11, 12-ந் தேதிகளில் தினமும் மாலை 5 மணிக்கு மேல் தியானம், கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. 13-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து இரவு 7 மணிக்கு மறையுறையும் நடந்தது. 14-ந் தேதி காலை 6.45 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
தேர் பவனி
15-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆயர் அமல்ராஜுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 10 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும், சிறுவர் சிறுமிகளுக்கு புது நன்மை, உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குழந்தை இயேசு ஆலய தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை இயேசு சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. ஆலயத்தில் இருந்து தேர் புறப்பட்டு துப்புக்குட்டி பேட்டை, பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பவனியாக சென்றனர். தொடர்ந்து நற்கருணை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை, மக்கள் செய்திருந்தனர்.