ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை சாவு
திருவெறும்பூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள் அலட்சியமாக பிரசவம் பார்த்ததால், பிறந்த பெண் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள் அலட்சியமாக பிரசவம் பார்த்ததால், பிறந்த பெண் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம்
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் விமலன். இவர் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீநிதி(வயது 26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸ்ரீநிதியை பிரசவத்திற்காக நேற்று மாலை 3 மணி அளவில் திருச்சி மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் வ.உ.சி. நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் டாக்டர் பணியில் இல்லாததால் நர்சுகள் செண்பகவல்லி, லதா ஆகியோர் ஸ்ரீநிதிக்கு பிரசவம் பார்த்தாக தெரிகிறது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
முற்றுகை
ஆனால் அந்த குழந்தை இறந்து விட்டதாக 3 மணி நேரம் கழித்து மாலை 6.30 மணிக்கு தகவல் தெரிவித்ததாகவும், நர்சுகளின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்ததாகவும் கூறி விமலனும், அவரது உறவினர்களும், அரசியல் கட்சியினரும் சேர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடவடிக்கை எடுக்கக்கோரி...
மேலும் திருவெறும்பூர் பகுதி தி.மு.க. செயலாளரும், 41-வது வார்டு கவுன்சிலருமான சிவக்குமார், திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், திருச்சி மாநகராட்சி மண்டலம்-3 தலைவர் மதிவாணன் ஆகியோரும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நர்சுகளின் கவன குறைவால் குழந்தையை பறிகொடுத்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து இறந்த குழந்தையின் பெற்றோருக்கு நஷ்டஈடாக ரூ.20 ஆயிரம் வழங்குவதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் குழந்தையின் பெற்றோர் தரப்பில் பணம் தேவை இல்லை என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக கூறினர். இதைத்தொடர்ந்து அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஸ்ரீநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஏற்கனவே பிரச்சினை
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் அலட்சியத்தால், ஒரு கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை 3 மாதங்களுக்கு மேலாக இறந்த நிலையில் இருந்தது குறித்து தகவல் தெரிவிக்காதது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் கருவியை இயக்குவதற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உரிய பணியாளர்கள் இல்லை. டாக்டர் குறித்த நேரத்திற்கு வருவதில்லை என்ற புகார் அடிக்கடி எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.