பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்தது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தீவிரமாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று மேலும் 1.60 அடி உயர்ந்தது. அதாவது நேற்று முன்தினம் 105.90 அடியாக இருந்த அந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 107.50 அடியாக அதிகரித்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,921 கன அடியாகவும், வெளியேற்றம் 1,005 கன அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணையுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 79 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 421 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 55 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுதவிர கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 46.25 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 10.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும் உள்ளது.
இதேபோல் தென்காசி மாவட்டம் கடனாநதி அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணைக்கு வருகிற 151 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணையும் நிரம்பி விட்டதால் உபரிநீர் மறுகால் பாய்ந்து செல்கிறது. ராமநதி அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வருகிற தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 130 அடியை தாண்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 68 அடியாக உள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -9, சேர்வலாறு -3, கருப்பாநதி -2, அடவிநயினார் -1, ஆய்க்குடி-2.