பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

Update: 2022-11-21 21:55 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பாபநாசம் அணை

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை இருக்கிறது. தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய அணையாகவும் திகழ்கிறது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதுபோல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த 15-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.75 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

ஒரு வாரத்தில் 10 அடி உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 98.60 அடியை எட்டி, 100 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 998.73 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர் வெளியேற்றம் 704.75 கன அடியாக உள்ளது.

இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 111.42 அடியாக உள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்