பாபநாசம் அணை நீர்மட்டம் 33 அடியாக குறைந்தது
கடும் கோடை வெயில் காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் 33 அடியாக குறைந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணை உள்ளது. கடந்த சில வாரங்களாக கடும் வெயிலின் காரணமாகவும், மழைப்பொழிவு இல்லாததாலும் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 33.85 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 181.32 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 357.25 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது. பாபநாசம் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.