பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அணைகளில் பழுதான மதகு, சங்கிலியை மாற்ற கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அணைகளில் பழுதான மதகு, சங்கிலியை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-10 18:45 GMT

பொள்ளாச்சி

பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அணைகளில் காலாவதியான மதகு, சங்கிலியை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள 9 அணைகளிலும் காலாவதியான மதகு, சங்கிலி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளையும் போர்க்கால அடிப்படையில் மாற்ற கோரி பொள்ளாச்சி பி.ஏ.பி. அலுவலகம் முன் பரம்பிக்குளம்-ஆழியாறு பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கண்காணிப்பு பொறியாளரிடம், பரம்பிக்குளம்-ஆழியாறு பாதுகாப்பு இயக்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் மிகப்பெரிய அணையான பரம்பிக்குளம் அணையின் மதகுகளில் நடுமதகு கடந்த 20-ந்தேதி உடைப்பு ஏற்பட்டு கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு தேக்கி வைக்கப்பட்ட 6 டி.எம்.சி. நீர் கடலுக்கு சென்று வீணாகி விட்டது. உடைப்பு ஏற்பட்ட இடத்தை முழுமையாக ஆய்வு செய்ததில் மதகை ஏற்றி, இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் சங்கிலியின் ஆயுட்காலம் காலாவதியாகி விட்டதால் பலமிழந்து அறுந்து விழுந்து மதகு மேலே இருந்த கான்கீரிட் தூண் மதகு மீது விழுந்ததில் பலத்த சேதமடைந்து கீழே விழுந்து உள்ளது.

விசாரணை குழு

இதனால் பாசனத்திற்கு தேக்கி வைக்கப்பட்டு இருந்த 6 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு விணாக சென்று விட்டது. மீதமுள்ள 2 மதகுகளும் துருப்பிடித்து உள்ளது. தூணக்கடவு அணையின் மதகுகளிலும் துருப்பிடித்து ஓட்டை விழுந்து ஆங்காங்கே நீர் சிறிய அளவில் வெளியேறிக் கொண்டிருக்கிறது. பொதுவாக அணையின் மதகு மற்றும் அதனுடன் இணைந்த சங்கிலி ஆகியவற்றிற்கு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்று உலக வங்கி தெளிவாக தெரிவிக்கிறது. ஆனால் பரம்பிக்குளம் அணையின் மதகு மற்றும் சங்கிலி 60 ஆண்டுகளை கடந்தும் இயங்கி கொண்டிருக்கிறது. எத்தனை முறை பராமரிப்பு செய்தாலும், அதிக காலம் பயன்படுத்துவதால் ஏற்படும் பலவீனமே இந்த விபத்திற்கு காரணமாக இருந்து உள்ளது.

பரம்பிக்குளம் அணையில் மட்டுமல்ல பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நிலைமை இதுதான். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி அணை, முக்கொம்பு அணை, ஊத்தங்கரை பாம்பாறு அணை ஆகியவற்றின் மதகுகள் சேதமடைந்து நீர் வெளியேறி உள்ளது. அதன்பிறகும் நீர்வள ஆதாரத்துறை அணைகளில் உள்ள மதகுகளை மாற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பரம்பிக்குளம் அணையின் மதகு உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தால் ஏற்பட்ட இழப்பு என்பது சாதாரணமானது அல்ல. இந்த நீரின் அவசியம் எவ்வளவு பெரியது, தீவிரமானது என்பது பி.ஏ.பி. விவசாயிகளுக்கு மட்டுமே புரியும். எனவே பி-.ஏ.பி. திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் மதகு, சங்கிலிகளையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும். அணையின் மதகு உடைந்தது குறித்து விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்