பா.ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியல்
பா.ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சி 8, 9, 10, 11-வது வார்டுகளில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் 10-வது வார்டுக்குட்பட்ட உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் அருகே நேற்று பகல் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். அப்போது அங்குள்ள ஒரு சில கடைகளுக்கு மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் வேண்டுமென்றே பாரபட்சம் காட்டுவதாக கூறி பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த உறையூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.