ஆழியாறு பாசனத் திட்ட தின விழா இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழா இனி ஆண்டுதோறும் அக். 7-ந் தேதி கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல்.ராவ் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், ஆழியாறு பாசனத் திட்ட தின விழா இனி ஆண்டுதோறும் அக். 7-ந் தேதி கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"நீர்வளம் - நீர்மேலாண்மை - அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினர் பெறும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்!
திட்டத்தை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மூத்தோரை நினைவு கூர்வோம்!" என்று தெரிவித்துள்ளார்.