நாகர்கோவில் கோர்ட்டில் திகார் சிறை கைதி ஆஜர்
நாகர்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு விசாரணைக்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை ஜூலை 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு விசாரணைக்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை ஜூலை 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கத்தியால் குத்திக்கொலை
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வாசிம் என்ற முன்னா என்ற ரபீக் (வயது 35). இவரும், இவருடைய உறவினரான செய்யது அலி என்பவரும் கம்பளி வியாபாரம் செய்வதற்காக கடந்த 2010-ம் ஆண்டு குமரி மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து கம்பளி விற்பனை செய்து வந்தனர். அவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று செய்யது அலி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாசிம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்த வாசிம் தலைமறைவாகி விட்டார்.
திகார் ஜெயிலில் அடைப்பு
அதைத் தொடர்ந்து டெல்லியில் அரங்கேறிய 4 கொலை வழக்கு தொடர்பாக வாசிம்மை டெல்லி போலீசார் கைது செய்து, திகார் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் வாசிம், திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் தகவல் கோட்டார் போலீசுக்கு தெரியவந்தது. செய்யதுஅலி கொலை வழக்கு தொடர்பாக அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து குமரி மாவட்ட போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி சென்று வாசிம்மை கைது செய்தனர். எனினும் வாசிம் மீது ஏற்கனவே 4 கொலை வழக்குகள் இருந்ததால் அவரை தொடர்ந்து திகார் சிறையிலேயே அடைத்து வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக வாசிம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படவில்லை.
அதை தொடர்ந்து செய்யது அலி கொலை தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக வாசிம்மிடம் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையல் வழக்கு விசாரணைக்காக வாசிம்மை நேரில் ஆஜர்படுத்தும்படி நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ்
அதன்படி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த வாசிம்மை துப்பாக்கி ஏந்திய டெல்லி கமாண்டோ பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையொட்டி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணை ஜூலை 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாசிம் மீண்டும் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.