அய்யப்பன் கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை கொள்ளை

ஸ்ரீவைகுண்டம் அருகே அய்யப்பன் கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன் சிலையை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-11 13:32 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே அய்யப்பன் கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன் சிலையை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அய்யப்ப சுவாமி கோவில்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அய்யப்ப சுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார்.

பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கோவில் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து கோவில் கருவறையின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர்.

ஐம்பொன் சிலை கொள்ளை

அங்கிருந்த பழங்கால ஐம்பொன்னாலான 1½ அடி உயரமும், 30 கிலோ எடையும் கொண்ட அய்யப்ப சுவாமி சிலையையும், வெண்கலத்தாலான சிறிய ஆஞ்சநேயர் சிலையையும் கொள்ளையடித்தனர்.

தொடர்ந்து கோவிலில் பொருட்கள் வைக்கும் அறை கதவின் பூட்டையும் மர்மநபர்கள் உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். அங்கு சுவாமியின் பின்னால் அலங்காரமாக வைக்க பயன்படுத்தும் வெண்கலத்தாலான திருவாச்சி மற்றும் சூடம் ஏற்றும் தட்டு போன்றவற்றையும் கொள்ளையடித்தார்கள்.

பின்னர் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்றபோது, அவர்களிடம் இருந்த ெவண்கலத்தாலான சிறிய ஆஞ்சநேயர் சிலை தவறி, கோவில் வாசலில் விழுந்தது. இதனை கவனிக்காத மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

நேற்று காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி, கோவிலின் கதவு உடைக்கப்பட்டு ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்தது அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கொள்ளை நடந்த கோவிலில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் ஐம்பொன் சிலையை கொள்ளையடித்தவர்களை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே அய்யப்பன் கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன் சிலையை மர்மநபர்கள் துணிகரமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

---------------

Tags:    

மேலும் செய்திகள்