மதுரை கோட்டத்தில் 'கதிசக்தி' திட்ட மேலாளராக அய்யப்ப நாகராஜா நியமனம்

மதுரை கோட்டத்தில் ‘கதிசக்தி’ திட்ட மேலாளராக அய்யப்ப நாகராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-07-14 20:25 GMT


நாட்டின் பொருளாதார இலக்கை 2024-25-ம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் வகையில் கதிசக்தி திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டமிடல், முக்கியத்துவம், செயல்படுத்துதல் என்ற அடிப்படையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. அதாவது, சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், ரெயில் நிலையங்கள், நீர்வழித்தடங்கள், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் இலக்கை அடைவது என்பது திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ரெயில்வே துறையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு இதற்காக ரெயில்வே வாரியத்தில் தனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. டெல்லி, பெங்களூரு, பிலாஸ்பூர், குர்தா ஆகிய இடங்களில் கதிசக்தி அலுவலகம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் கதிசக்தி பிரிவு தொடங்கப்பட்டது.

அதன்படி, மதுரை கோட்டத்திலும் கதி சக்தி பிரிவு தொடங்கப்பட்டது. இதன் தலைமை திட்ட மேலாளராக அய்யப்ப நாகராஜா பொறுப்பேற்றுள்ளார். இவர், இதற்கு முன்னர் தென்னக ரெயில்வே துணைத்தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். பதவி உயர்வில் மதுரை கோட்ட கதிசக்தி பிரிவின் தலைமை திட்ட மேலாளராக பதவியேற்றுள்ளார். கதிசக்தியின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் ராமேசுவரம், மதுரை, நெல்லை, திருச்செந்தூர், விருதுநகர், அம்பாசமுத்திரம், சோழவந்தான், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், பரமக்குடி, கேரள மாநிலம் புனலூர் உள்ளிட்ட 19 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக ரூ.104 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்