தூத்துக்குடி துளசிமாலை கடைகளில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் இன்று (வியாழக்கிழமை) மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர். இதனால் புதன்கிழமை துளசிமாலை கடைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் இன்று (வியாழக்கிழமை) மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர். இதனால் நேற்று துளசிமாலை கடைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவில் தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் ஒரு மண்டலம் முன்னதாக அதாவது கார்த்திகை மாதம் முதல் தேதியே துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாக பார்த்து வாங்கி பூஜித்து அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். குருசாமி இல்லாவிட்டால் கோவிலுக்கு சென்று கடவுளின் பாதத்தில் மாலையை வைத்து அர்ச்சனை செய்து அய்யப்பனை குருவாக நினைத்து மாலையை அணிந்து கொள்வார்கள். இந்த வழிபாட்டில் இருமுடி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் நாம் சம்பாதித்த பழைய வினைகள் மற்றும் புதியவினைகள் இரண்டையும் எடுத்துச்சென்று பகவானிடம் விட்டு விட்டு வருதலே இருமுடியின் தத்துவமாகும்.
மாலை விற்பனை
கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து குறைந்தது ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிப்பர். கொரோனா காலத்தில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதில் சிரமங்கள் இருந்து வந்தன. தற்போது கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளதால், ஏராளமன பக்தர்கள் மாலை அணிவதற்கு தயாராகி வருகின்றனர். இதனை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதியான இன்று (வியாழக்கிழமை) விரதம் தொடங்க உள்ளனர்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி சிவன்கோவிலை சுற்றி உள்ள பெரும்பாலான கடைகளில் துளசிமாலை, ருத்ராட்ச மாலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இங்கு துளசி மாலை, சந்தனமாலை, ருத்ராட்ச மாலை, கருந்துளசி மாலை ஆகியவை ரூ.40 முதல் ரூ.200 வரையும், அய்யப்பசாமி டாலர் ரூ.10 முதல் ரூ.20 வரையும் விற்பனை செய்யப்பட்டன. இதனை திரளான பக்தர்கள் வாங்கி சென்றனர்.