சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி அய்யப்ப பக்தர் பலி
குளித்தலையில் சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி அய்யப்ப பக்தர் பலியானார். தந்தை-மகன் படுகாயம் அடைந்தனர்.
குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள விலத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 42). இவர் திருப்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். டிரைவரான இவர், குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது மகன் ஹரிகிருஷ்ணா (16), தனது தங்கை வாசுகி மகன் பாரதி (10) ஆகிய 2 பேரையும் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திருப்பூரில் இருந்து திருவாரூருக்கு கடந்த 25-ந்தேதி சென்று கொண்டிருந்தார்.
தடுப்பு சுவரில் மோதியது
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அய்யப்ப பக்தர் பலி
பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாரதி நேற்று பரிதாபமாக இறந்தான். மற்ற 2 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பாரதி 5-ம் வகுப்பு படித்து வந்ததும், அவன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.