அய்யனார் கோவில் மலைப்பகுதியில்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாததால் மான்கள் உயிரிழக்கும் அபாயம்

கண்டனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யனார் கோவில் மலைப்பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாததால் மான்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-02 18:45 GMT

கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மலையடிவாரம் வழியாக தேனி-வருசநாடு பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். வெயில் காலங்களில் மலைப்பகுதியில் இருக்கும் சிறு, சிறு குளங்களில் நீர் வற்றி விடும். அப்போது மான்கள் குடிநீர் தேவைக்காக இரவு நேரத்தில் மலையடிவாரத்திற்கு வந்து சாலையை கடந்து அருகே இருக்கும் தோட்டப் பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

அவ்வாறு சாலையை கடக்கும் போது சில நேரங்களில் வாகனம் மோதி மான்கள் தொடர்ந்து இறந்து வந்தன. இதனை தடுக்க கடந்த 2019-ம் ஆண்டு அய்யனார் கோவில் மலைப்பகுதியில் சாலையோரம் 3 இடங்களில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டன. மேலும் சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் வனத்துறையினர் முறையாக நீர் நிரப்புவதில்லை. இதனால் 3 தொட்டிகளிலும் குறைந்த அளவிலான மழை நீர் மட்டுமே தேங்கி காணப்படுகிறது. அந்த நீரிலும் பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மான்கள் குடிநீர் தொட்டியில் நீர் அருந்துவதில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மலைப்பகுதியில் இருந்து மான்கள் மீண்டும் குடிநீர் தேடி தோட்டப்பகுதிக்கு செல்ல தொடங்கியுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மான்கள் பலியாவதை தடுக்கும் வகையில் மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து, அதில் நீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்