அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-01-20 18:45 GMT

தென்தாமரைகுளம்:

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தைத்திருவிழா கொடியேற்றம்

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், திருநடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்து பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி கொடியை ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்தனர்.

திரளான பக்தர்கள்

தொடர்ந்து அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் வருகை தந்து திரளாக கலந்து கொண்டனர். விழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.

கலிவேட்டை நிகழ்ச்சி

வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சாஸ்த்தான் கோவில்விளை, செட்டிவிளை உள்பட பல சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அதனை தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.

30-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்துவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்