திருப்பூர்,
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 இணைந்து மத்திய பஸ் நிலையத்தில் 34-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி, திருப்பூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவன் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது அவர்கள் பேசுகையில், 'விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட அனுமதிக்க்க்கூடாது. இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். அதிவேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது வாகன ஓட்டிகள் செல்போனை பயன்படுத்தக்கூடாது' என்றனர். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். இதனைத்ெதாடர்ந்து மாணவர்கள் போதையில் வாகனம் ஓட்டும்போதும், செல்போனை பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் விபத்துகளை தத்ரூபமாக நடித்து காட்டினார்கள். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடனத்தை ஆடியும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.