ஆலங்குளம் அருகே பரிதாபம்; மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி

ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பாிதாபமாக இறந்தனா்.

Update: 2022-06-08 13:08 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பாிதாபமாக இறந்தனா்.

மர்ம காய்ச்சல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தில் சுமார் 3 வாரங்களாக மர்ம காய்ச்சல் நிலவி வருகிறது. இந்த கிராமத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக மேலத்தெருவை சேர்ந்த சொரிமுத்து மகள் பூமிகா (வயது 6) என்ற சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

2 சிறுமிகள் பலி

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மாலை பூமிகா பரிதாபமாக இறந்தாள்.

இதேபோல் அதே ஊரை சேர்ந்த பழனி என்பவருடைய மகள் சுப்ரியா (8) என்ற சிறுமிக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

சுகாதார துறையினர் தடுத்து நிறுத்தம்

தகவல் அறிந்ததும் சுகாதார துறையினர் மருத்துவ முகாமிட அந்த கிராமத்திற்கு வந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

கடந்த 3 வாரங்களாக காய்ச்சல் அதிகமாக உள்ளதாகவும், சுகாதார துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் உயர் அதிகாரிகள் வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் தர்மலிங்கம், கொள்ளை நோய் பிரிவு மருத்துவர் தண்டாயுதபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, மாவட்ட உதவி மருத்துவர் முகமது இப்ராஹிம், இளநிலை பூச்சியல் வல்லுநர் பாலாஜி, வட்டார சுகாதார மேற்பர்வையாளர் கங்காதரன், வட்டார மருத்துவர் ஆறுமுகம் ஆகியோர் கிராமத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

குடிநீரில் நெளிந்த புழுக்கள்

அங்குள்ள குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். இதில் லார்வாக்கள், புழுக்கள் ஏராளமானவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இனிமேலும் காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்தனர்.

அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாகவும், எனவே அடிக்கடி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

சோகம்

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த மாதிரியை சுகாதார துறையினர் எடுத்தனர். உயிரிழந்த 2 சிறுமிகளின் உடல்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரே நாளில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்ததையடுத்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்