தர்மபுரி:
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து தர்மபுரி மாவட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சிவரஞ்சனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தர்மபுரி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாசு இல்லாத மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து தீபாவளி பண்டிகையான இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர்.