புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் "புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 142 கற்போர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 271 கற்போர் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு கல்வி தன்னார்வலர்களை கொண்டு எழுத படிக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆலத்தூர் வட்டாரத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். இதேபோல் விழிப்புணர்வு ஊர்வலமானது பெரம்பலூர் வட்டாரத்திற்கு அருமடலிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வேப்பந்தட்டையிலும், வேப்பூர் வட்டாரத்திற்கு வேப்பூரிலும் நடந்தது.