மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா

உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-13 18:45 GMT

விழிப்புணர்வு சுற்றுலா

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- இன்றைய தலைமுறையினர்கள் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், பண்டைய காலங்களில் வாழ்ந்து வந்த தமிழர்கள், நகர நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தமைக்கான சான்றுகளை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள அகழ்வாராய்ச்சி மையம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவைகளை பள்ளி மாணவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதன் சிறப்பம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா துறையின் வாயிலாக, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு, ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நினைவு பரிசு

இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில், சிவகங்கை அருங்காட்சியகம், கீழடி அருங்காட்சியகம், அகரம், கொந்தகை அகழ்வாராய்ச்சி மையம், திருமலை மற்றும் இடைக்காட்டூர் தேவாலயம் ஆகிய இடங்களுக்கு மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் விழிப்புணர்வு சுற்றுலா அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மாணவ, மாணவி்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்