பசுமையான கிராமங்களை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட பசுமையான கிராமங்களை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட பசுமையான கிராமங்களை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளை தூய்மைப்படுத்தும் விதமாக நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்ட ஊரகப் பகுதிகளில் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மையான சுகாதாரத்தை ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து ஊரகப்பகுதிகளிலும் வருகிற 2-ந் தேதி வரை நம்ம ஊரு சூப்பரு என்ற தலைப்பில் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பிரசாரம் நடத்திட வேண்டும்.
பசுமையான கிராமங்கள்
பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டுமொத்த தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு வழங்குதல், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்தல், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்கள் உருவாக்குதல் உள்ளிட்டவைகளை பிரசாரத்தில் தெரிவிக்க வேண்டும்.
இந்த பிரசாரத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திட மாவட்ட அளவில் இணை இயக்குனராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித் துறையுடன் ஒருங்கிணைந்து சிறப்பு பிரசாரத்தினை திறம்பட செயல்படுத்திட திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர், துணை இயக்குனர், மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், சுற்றுலாத்துறை உதவி இயக்குனர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் பிற அலுவலர்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.