சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
பள்ளி மாணவர்கள்-பொதுமக்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழிந்து வரும் சிட்டுக்குருவிகள்
அதிராம்பட்டினம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பால் அழிந்துவரும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது. கிளி, புறா, குயில், செண்பகம், மயில் இந்த வரிசையில் சிட்டுக்குருவிகள். இவைகள் மனிதர்கள் ரசித்து போற்றப்படும் பறவைகள். கவிஞர்கள் இயற்கையை வர்ணிக்கும் போதும், பெண்களை ஒப்பிடும் போதும் பறவைகளை உதாரணப்படுத்தித்தான் பாடல்களையும், கவிதைகளையும் எழுதும் பழக்கம் அன்றைய கவிஞர்கள் முதல் இன்றைய கவிஞர்கள் வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இயற்கைக்கு அழகூட்ட மரங்கள், செடி- கொடிகள் உள்ளது போல், அதற்கு மெருகூட்டும் வகையில் பறவைகள் இனங்கள் தான் உள்ளது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும். இந்தநிலையில் மரங்களை வெட்டுதல், கடும் சத்தத்ததுடன் கூடிய பட்டாசுகளை வெடிப்பது போன்ற இயற்கை பாதிப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கையால் பறவைகள் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
தண்ணீர் தேடி அலையும் பறவைகள்
அதிலும் மென்மையான தன்மை கொண்ட சிட்டுக்குருவி இனங்கள் செல்போன் டவர்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குருவிகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதில்லை. இதற்கு முன்பு சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏற்ப கூரை வீடுகள் இருந்தன. தற்போது கான்கீரிட் வீடுகளாக மாறி போனதால், அவற்றில் குருவி கூடு கட்டுவது சாத்தியம் இல்லாத நிலை உள்ளது.
தற்போது கோடை வெயிலினால் தண்ணீரை தேடி காகம், குருவி, கிளி போன்ற பறவைகள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றன. தாகத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அவை மடிந்து போகக்கூடும்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
எனவே வீட்டின் மொட்டை மாடியில் சிறிய குவளையில் நிழலான இடத்தில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகம் தீர்க்க உதவ வேண்டும். சமீப காலங்களாக அதிராம்பட்டினம் பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளில் அதிக அளவில் சிட்டுக்குருவிகள் காணப்பட்டு வருகிறது. இயற்கை வளம் காக்க பறவைகளை பாதுகாக்க வேண்டும். அதற்கு பொது மக்களிடம் பறவைகளின் முக்கியத்துவத்தையும் அதை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.