திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கிராமங்களை தூய்மையாக வைக்க, திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Update: 2022-09-09 15:01 GMT

ஊட்டி, 

கிராமங்களை தூய்மையாக வைக்க, திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து தொடங்கி கமர்சியல் சாலை வழியாக காபிஹவுஸ் ரவுண்டானா வரை சென்றது. பேரணியில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டம் என்ற நிலையை எய்தியது போல, குப்பைகளற்ற கிராமம் என்ற நிலையை விரைவில் எய்திட அனைவரின் பங்களிப்பும் அவசியம்.

தூய்மையான கிராமங்கள்

சுற்றுச்சூழல் தூய்மையான கிராமங்களை அடையவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கம் கிராமப்புற மக்கள் இடையே தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுகாதாரம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக ஒருங்கிணைந்த தீர்வு காண்பதற்கு நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் வருகிற அக்டோபர் 2-ந் தேதி வரை பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் செயல்பாடுகள் நடைபெறுகிறது.

மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் பார்வையிட்டார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குனர் ஜாகீர் உசேன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்