தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
விருத்தாசலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருத்தாசலம்,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு விருத்தாசலத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு துறையின் கடலூர் மாவட்ட அலுவலர் குமார் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விருத்தாசலம் சங்கர், சம்பத், திட்டக்குடி சண்முகம், மங்கலம்பேட்டை ஜெயச்சந்திரன், வேப்பூர் சதாசிவம் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.