குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு
குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின்பேரிலும், கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி, வேலூர் தொழிலாளர் இணை கமிஷனர் புனிதவதி அறிவுரையின்படி, தொழிலாளர்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் அப்துல்லாபுரம், சேக்கனூர், சாத்துமதுரை, சதுப்பேரி, செருவங்கி, காவனூர், செம்பராயநல்லூர், விண்ணம்பள்ளி, மெட்டுக்குளம், மார்தாண்ட குப்பம், வஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வி.சி.மோட்டூர், மாங்காடு, மூதூர் ஊராட்சிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் கைலாசகிரி ஊராட்சி உள்பட பல்வேறு ஊராட்சிகளில் ஊராட்சிமன்ற தலைவர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் முன்னிலையில் அனைத்து வகையான தொழில்களில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளர் இளம் பருவத்தினர் அகற்றுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்கவும், அவர்களின் குடும்பத்துக்கு மறுவாழ்வு அளிக்கவும், உள்ளாட்சி அமைப்புகள் குழந்தை தொழிலாளர் அற்றதாக அறிவிக்க பாடுபட வேண்டும். ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அளிக்கப்படும் பணி ஒப்பந்தங்களில் குழந்தை தொழிலாளர் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்ற ஒப்பந்த சரத்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டலப்பொருட்கள் விதிகள், நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இந்த தகவலை வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்துள்ளார்.