நாமக்கல் கங்காநகரை சேர்ந்த சித்திக் பாட்ஷா - பானு தம்பதியினரின் மகள் ஆயிஷா (வயது23). இவரது தோழி பெரம்பலூரை சேர்ந்த அபர்ணா (23). இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள மலை பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு, பெண்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து உள்ளனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இருவரின் பயணங்கள் வெற்றி பெற பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வழிஅனுப்பி வைத்தனர். இதுகுறித்து பைக் ரைடர் ஆயிஷா கூறியதாவது:-
பெண்கள் எல்லாதுறையிலும் சாதிக்க முடியும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றனர் என்பதை வலியுறுத்தி தான் தானும், எனது தோழியும் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளோம், தமிழகத்தில் உள்ள கொல்லிமலை, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட 15 மலை பகுதிகளுக்கு 7 நாட்களில் சுமார் 1,600 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். கடந்த 5 ஆண்டுகளாக நான் பைக் ரைடராக இருந்து வருகின்றேன். இருப்பினும் 7 நாட்கள் தொடர் பயணம் என்பது இதுதான் முதல் முறை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் ஆயிஷா, அபர்ணா ஆகிய இருவரின் பயணம் இறுதியாக ஜவ்வாது மலையில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.