அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
சிவகாசி யூனியன் அலுவலகத்தில் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி யூனியன் அலுவலகத்தில் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
விழிப்புணர்வு கூட்டம்
சிவகாசி யூனியன் அலுவலகத்தில் பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் அனைத்து திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் தனித்தனியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துக்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலர்கள் கலந்து கொண்டனர்.
வீடு கட்ட நிதி
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் பேசியதாவது:- பாரத பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் சிவகாசி யூனியனில் 1,557 பேர் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தற்போது வரை 868 பேருக்கு வீடு கட்ட உரிய அனுமதி வழங்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.30 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த நிதியை பயன்படுத்தி பயனாளிகள் தங்களுக்கான வீட்டினை சிறப்பாக கட்டி முடிக்க வேண்டும். இந்த பணிகள் விரைவாக நடக்க சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் விழிப்புணர்வு சுவரொட்டியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி ஆகியோர் வெளியிட்டனர். இதனை பஞ்சாயத்து தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.