உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்
திருவண்ணாமலை பெரியகல்லபாடியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை பெரியகல்லபாடியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நோக்கம், பயன்
திருவண்ணாமலை வட்டாரத்தை சேர்ந்த பெரியகல்லபாடி கிராமத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கும் திட்டம் நிலை-4-ன் கீழ் துரிஞ்சலாறு உப வடிநிலப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) தாமஸ் தலைமை தாங்கி விவசாயிகளிடையே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிகள் பங்குதாரர்களாக இணைவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் விளக்கி பேசினார். வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) காயத்ரி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள், பங்கு தொகை விவரங்கள் பற்றி கூறினார்.
மானிய திட்டங்கள்
மேலும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி, உழவர் சந்தையில் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கான வழிமுறைகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நன்மைகள் மற்றும் தேசிய மின்னணு வேளாண் சந்தை ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
வேளாண்மை அலுவலர் சோபனா, வேளாண்மை துறையில் உள்ள மானிய திட்டங்கள் பற்றியும், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
தேசிய வேளாண் நிறுவனத்தின் குழு தலைவர் ரத்தினராஜா, மற்றும் மணிலா உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் சண்முக சுந்தரம், வேளாண் விளை பொருட்களை சந்தைபடுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றியும் பேசினர்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர், துணை தலைவர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) பழனி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை களப்பணியாளர் இமையழகன் செய்திருந்தார்.