திருப்புவனத்தில் விழிப்புணர்வு கூட்டம்
திருப்புவனத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
திருப்புவனம்
திருப்புவனம் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட விழிப்புணர்வு கூட்டம் திருப்புவனத்தில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் நாகராஜ் வரவேற்றார். துணை தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், போலீசார், வருவாய்த்துறையினர், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், தனியார் கழிவுநீர் அள்ளும் வாகன உரிமையாளர்கள், அலுவலக பணியாளர்கள், துப்புரவுபணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளக் கூடாதென்றும், கழிவுநீர் உறிஞ்சி வாகனம் மூலம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கழிவுநீர் அள்ளும் வாகனங்களில் முதலுதவி பெட்டி, பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், வீட்டு உரிமைதாரர், வணிக நிறுவன உரிமையாளர்கள் மனிதர்களை பயன்படுத்தி செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால் நீதிமன்றம் மூலம் அபராதம், தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாகன உரிமம் பெற்றவர் மட்டுமே சுத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தூய்மை பணியாளர்கள் தனியார் வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள கழிவு நீர், கசடுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடக்கூடாது என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.