சமரச மைய விழிப்புணர்வு ஊர்வலம்
நெல்லை கோர்ட்டில் சமரச மைய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நெல்லை பாளையங்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் சமரச மையம் மூலம் வழக்குகளை விரைவாக முடிப்பது பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'தமிழ்நாட்டில் சமரச மையம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் சமரச மையம் மூலம் வழக்குகளை விரைவாக முடிப்பது பற்றிய விழிப்புணர்வு துண்டுபிரசுர வாகனம், விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டது. சமரசம் என்பது வழக்கு தரப்பினர் தங்களது முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமுகமான தீர்வு காணக்கூடிய எளிய வழி ஆகும். எனவே பொதுமக்கள் கோர்ட்டில் உள்ள தங்களது வழக்குகளை விரைந்து முடிக்க சமரச மையத்தை நாட வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா, சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன், தலைமை குற்றவியல் நடுவர் மனோஜ்குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் பத்மநாபன், பன்னீர்செல்வம், திருமகள், மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகுமார், போக்சோ கோர்ட்டு நீதிபதி அன்புசெல்வி, சார்பு நீதிபதி அமிர்தவேலு, சிறப்பு ஊழல் தடுப்பு கோர்ட்டு நீதிபதி செந்தில்முரளி, நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன், செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.