உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
மாரத்தான் போட்டி
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு 'உடல் நலனை பேணுவோம், விருதுநகர் நலம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நேற்று நடத்தியது. ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் என 40 வயது மேற்பட்டோருக்கு 5 கி.மீ. தூரமும் என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.
விருதுநகர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து போட்டியினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். போட்டியில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன் உள்பட அனைத்து நகராட்சி, பஞ்சாயத்து யூனியன், பேரூராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 802 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்கள்
10 கி.மீ. மாரத்தான் போட்டியில் வெம்பக்கோட்டை பஞ்சாயத்து உறுப்பினர் முத்து முனீஸ்வரன் முதல் இடத்தையும், இடையங்குளம் பஞ்சாயத்து உறுப்பினர் பாலமுருகன் 2-வது இடத்தையும், சிவஞானபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ராமச்சந்திரன் 3-வது இடத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான போட்டியில் இடையங்குளம் பஞ்சாயத்து உறுப்பினர் பஞ்சவர்ணம் முதலிடத்தையும், அத்திகுளம் பஞ்சாயத்து உறுப்பினர் முனீஸ்வரி 2-வது இடத்தையும், கோல்வார்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் பூரணம் 3-வது இடத்தையும் பெற்றனர். ஆண்களுக்கான 5 கி.மீ. தூர போட்டியில் சிந்துவம்பட்டி பஞ்சாயத்து உறுப்பினர் கடற்கரை முதல் இடத்தையும், தும்முசின்னம்பட்டி பஞ்சாயத்து உறுப்பினர் எர்ரயன் 2-வது இடத்தையும், நென்மேனி பஞ்சாயத்து உறுப்பினர் வெற்றிவேல் 3-வது இடத்தையும் பெற்றனர்.
பரிசளிப்பு
10 கி.மீ. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25ஆயிரமும், 2-வது பரிசாக ரூ. 15 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது. 5 கி.மீ. தூர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7,500-ம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் பரிசுகளை வழங்கினார்.